எஸ்.ராமகிருஷ்ணன்:- ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்?
பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது.
கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தன? எந்த ஊரை பழைய கொற்கையாக, பழைய வஞ்சியாக, பழைய முசிறியாக, நாம் கருத முடியும் என்றால், நாம் நம்முடைய அடையாளங்களாக, தேடி, மீளாய்வு செய்து, இன்னும் சொல்லப்போனால், இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் அடையாளம் காணமுடியாது. கொற்கையைப் பார்த்துவிட்டு, கொற்கையிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஆதிச்சநல்லூர் ஊர் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தமிழகத்தினுடைய மிகத் தொன்மையான ஒரு புதைமேடு, 114 ஏக்கர் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவும் இடுகாடுதான். முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.
ஓர் ஊரில் இவ்வளவு பெரிய இடுகாடு இருக்கிறதென்றால் இதை ஒட்டி, மிகப்பெரிய மக்கள் வசித்திருக்கணுமில்லையா? ஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையா, இன்று சிந்து, ஹரப்பாவை ஆய்வு செய்யும்போது, என்ன சொல்றாங்க, ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்ற நகரம், இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும், அந்த இனம் பண்பாட்டில், மேலோங்கியிருக்கணும், கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால், இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்தது? எந்த நகரம் இருந்தது? எந்த நகரத்தினுடைய இடுகாடு இது? பக்கத்தில் இருந்த, இன்றைக்கும் இருக்கிற, நகரம் கொற்கை என்றால் ஒரு காலத்தில் கொற்கை பெரிய நகரமாக, பெரிய விரிவோடு இருந்ததாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆதிச்சநல்லூர் போன்ற ஒன்று பக்கத்தில் இருக்க முடியும்.
இந்த ஆதிச்சநல்லூர் ஊரைப் பார்க்கும்போது, ஆதிச்சநல்லூரைப் பற்றி கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டில் ஆதிச்சநல்லூரைப்பற்றிச் சொல்லும்போது குறிப்பு வருகிறது. வெள்ளூர் ஆதிச்சநல்லூர் எனக் குறிப்பிடுகின்றனர். வெள்ளூர் என்று குறிப்பிடும் சொல் சங்ககால இலக்கியத்திலும் வரக்கூடிய சொல். இந்த வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்கிற கிராமத்தை ஏன் வெள்ளூர்னு குறிப்பிடுறாங்கன்னா, வெள்ளூர் என்ற இன்றைய பஞ்சாயத்திற்குட்பட்டதாக இந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. ஆனால் வெள்ளூர் என்ற சொல் பழந்தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்தில் வரக்கூடியதாக இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி பழமையான ஆதிச்சநல்லூரின் எச்சங்கள் இருக்கின்றது, கிடைக்கக்கூடும், அதே ஊரில் அவர்கள் சொன்னார்கள்:-_ இங்கே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறுதான் திசைமாறி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் நதியானது பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஓடத் தொடங்கியது. பொன்னையாப்பிள்ளை என்பவர் இந்த ஆற்றினுடைய கரையை மாற்றி திசை திருப்பி ஆற்றினுடைய போக்கை மாற்றினார் என்பதால் கோட்டை கட்டிக்கச் சொல்லி உரிமை கொடுத்தார்கள். அப்படி கோட்டை கட்டிக்கச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமையின் காரணமாக சிறீவைகுண்டம் பக்கம் கோட்டை கட்டி, பொன்னையாப்பிள்ளையும், அவருடைய குடும்பத்தினரும் வசித்தார்கள். அந்த கோட்டை கட்டி வசித்த பிள்ளைகளின் பெயர்தான் கோட்டைப் பிள்ளைகள். கோட்டைப்பிள்ளைமார் கோட்டைக்குள்ளேயே பிறந்து கோட்டைக்குள்ளேயே வளர்ந்து பெண்கள் இறந்தால்கூட வெளியே வரமுடியாது. இந்த கோட்டைப்பிள்ளைகள் எப்படி உண்டானார்கள் என்று பார்த்தால் அவர் சொல்கிறார்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த தாமிரபரணி ஆற்றைத் திசை திருப்பி மாற்றம் செய்த பொன்னையாப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த உரிமைன்னு சொல்கிறார். இதனுடைய காரணமாக பக்கத்தில் பொன்னங்குறிச்சி ஊர் இருக்கிறது. நமக்கு என்ன தேவை இருக்குன்னா, தமிழர்கள் தங்களுடைய ஊர்ப் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு. இந்த பொன்னங்குறிச்சி ஊருக்குள் இருக்கக்கூடிய பொன்னன் யாரு? அந்தப் பொன்னனுக்கு, இந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்தது? இது ஆதிச்சநல்லூருக்குப் பொருந்துதான்னு பார்த்தா, ஆதிச்சநல்லூர்ல இன்னொரு குறிப்பும் சொல்றாங்க. ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில், ஒரு சமணத் திருவுருவத்துடன் இருந்திருக்கிறது. இந்தப் புதைமேடை ஒட்டியே இருந்ததாகவும், இந்தப் புதைமேடையை ஒட்டி இருந்த, சமண தீர்த்தங்கரரை பின்னர் வந்த யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர். எனக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் சொல்றாங்க. நான் நாகப்பட்டினத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சிலையைப் பார்ப்பதற்காக போதிமங்கலம் என்ற ஊருக்குப் போனேன். முதலில் இந்த ஊரில் போய் கேட்டோம். இங்கே இளவரசர் சிலை இருக்கு.
போய் பாருங்கன்னாங்க. இளவரசர் சிலையை நாங்கள் போய் பார்த்தால், அது புத்தருடைய சிலை. அவங்க சொல்றாங்க, இது வானத்திலிருந்து பறந்துவந்து ஓர் இளவரசன் எங்க ஊரில் விட்டுட்டான். இந்த இளவரசனை நாங்க பாதுகாத்து வச்சிருக்கோம் என்றார்கள். நாங்க சொன்னோம், இது புத்தருடைய சிலை. உங்க ஊர்ல புத்த மடாலயமும் அல்லது ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலமும் இருந்திருக்கும் என்று சொன்னோம். பாதுகாத்து வச்சுருங்க என்றோம். நாங்க இன்னும் பாதுகாத்து வச்சிருப்போம்னு சொன்னார்கள். ஒரு 5, 6 வருடங்களுக்கு முன்பாக திரும்பப் போனேன். நான் திரும்பிப்போகும்போது அந்த ஊரில் வழிபாட்டுத் தலத்தைத் தவிர, 6 அடி புத்தர் சிலையைக் காணோம்.
கேட்டபோது அந்த ஊர்க்காரர்கள் சொல்றாங்க. பறந்து தானே வந்தாரு, பறந்து போயிட்டாரு என்று. அய்யா! உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமா? பெரிய சிலை எப்படிப் பறந்து வரும்! பறந்து வந்தது, பறந்து போயிடுச்சுய்யா! ஏன்னா, நாங்க சொல்றோம்ல, இதுதான் வானத்திலிருந்து வந்த இளவரசர்னு, அவர் பறந்து போயிட்டார். ஆக, இப்படி நம்ம கண்ணு முன்னாடியே பவுத்த மிச்சங்கள் எல்லாமே, அழிஞ்சி போயிட்டு இருக்கிறதைப் பார்க்கிறேன். இங்கேயும் இதே மாதிரி பவுத்தம்போல், மிச்சம் இருந்துட்டு இருக்கு ஆதிச்சநல்லூர்ல. அது காணாமல் போயிருச்சுங்கறாங்க, இந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் விரிவான ஆய்வை, சத்தியமூர்த்தி அய்யா அகழ்வாராய்வுத் துறையில் போய் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கொண்டு நிறைய முதுமக்கள் தாழிகளை எடுத்து, கிடைத்த, பாசிமணிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் நமக்கு இருக்கும் கேள்வி என்னன்னா, ஏன் இந்த ஆய்வை, ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.
பொதுவாக ஓர் ஆய்வு, வெளியாகி ஓர் ஆண்டுகளிலேயே, இல்லை ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆய்வின் முடிவுகள் புல்லட்டின் என்று சொல்லக்கூடிய வெளியீடாக வெளியாகும். தமிழில் வெளியாகாவிட்டாலும், நாங்க மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஆங்கிலத்தில்தான் வெளியிடலாம்னு, 2004ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு ஆண்டுகாலமாகவா இந்த அறிக்கையை வெளியிட மாட்டேங்கிறாங்க என்றால் இந்த ஆய்வறிக்கையின் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. நண்பர்களே, இது வெளியானால் சிந்துசமவெளி, ஹரப்பா, மொகஞ்சதாரோவைவிட பழமையானது, ஒருவேளை, ஆதிச்சநல்லூர் தமிழனுடைய தொன்மையான நாகரிகத்திற்கான சான்றாகும். அதை வெளியிடாமலே வைத்திருக்கிறார்கள். இன்னொன்று இந்த நிலப்பரப்பில் 114 ஏக்கரில் ஆய்வு செய்யப்பட்டது. பார்த்தீங்கன்னா, ஒரு 10 அடி, 100 அடிக்குள்ளதான் ஆய்வு செய்திருக்கிறார்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சிந்துசமவெளியை ஆய்வு செய்வதற்குக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், சிந்து, ஹரப்பாவையும் சரி, இதற்கப்புறம் போஸ்ட் ஹரப்பான்னு சொல்லக்கூடிய லோத்தல் மாதிரி, குஜராத்தைச் சார்ந்த இடங்களும் சரி, ஆய்வு செய்றாங்க. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம் இருக்கிறது. இந்த இடம் சிந்து சமவெளியைவிட புராதனமானது. இரண்டு உதாரணங்களை தொ.பரமசிவம் சொல்கிறார்.
ஒன்று, இரும்பை உருக்குகிற எஃகு தொழில்நுட்பம், சிந்துசமவெளியில் இருந்திருக்கு. அப்படி இரும்பை உருக்குகிறபோது, என்ன பதத்தில் உருக்க வேண்டும்? எவ்வளவு உஷ்ணம் வேணும்? உருக்குகிறபோது இரும்பை, உருக்குகிற இரும்பை, எப்படி ஒரு கருவியாக செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சிந்துசமவெளியினுடைய எங்கேயிருந்தும் இரும்பைக் கண்டுபிடித்தாலும், ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சிந்துசமவெளிக்கு வெளியில் எங்கே இருக்கிறது என நான் தேடிப் பார்க்கிறேன். சிந்துசமவெளிக்கு வெளியே இருக்கக்கூடிய கங்கைப் பகுதியில் இல்லை, இந்தப் பக்கம் வந்தால், மத்திய இந்தியாவில் இல்லை, வட இந்தியாவில் இல்லை, தென்னிந்தியாவிலும் வேறு மாகாணங்களிலும் இல்லை. சிந்துசமவெளியைப் போலவே, அதே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பத்தை, அதேபோல, ஸிணீவீஷீ எனச் சொல்லக்கூடிய, கலப்பு முறை தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் இருக்கிறது எனச் சொல்றாரு. அப்ப என்ன இருக்கிறதென்றால், சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அளவுமுறைகள் ஆதிச்சநல்லூரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், தமிழன் இங்கிருந்து சிந்து சமவெளிக்குச் சென்றிருக்கிறானா அல்லது சிந்துசமவெளி தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததா? என்ன நடந்தது? இப்போ அந்த செங்கற்களையெல்லாம் அளவிடுகிறார்கள். சுட்ட செங்கற்களை, சிந்து சமவெளியில் கிடைத்த அதனுடைய அளவை எடுத்து, பருமனும், நீளமும் ஒரே அளவாக இருக்கிறது எனச் சொல்றாங்க. எங்கே கல்லை எடுத்தாலும் சிந்துசமவெளி, ஒரே மாதிரியான, சுடு செங்கல் உருவாக்கப்பட்டிருக்கு. அதே செங்கல் அதே அளவுகளில், ஆதிச்சநல்லூர்ல கிடைக்கிறது, அப்போ ஆதிச்சநல்லூர் என்பது சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் அதைவிட மூத்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகத்தை, அந்த நாகரிகத்தினுடைய முடிவுகளை நாம் பார்க்கிறோம். நான் ஏன் தெரிஞ்சுக்கலை? இன்றைக்கு நாம் திரும்பத்திரும்ப என்ன சொல்றோம், நாம நம்ம பண்பாட்டு வேர்களை இழந்துட்டோம். நம்ம உடையை மாத்திட்டோம்.
எல்லாவற்றையும்விட அடிப்படையையே கைவிட்டு விட்டோமே? அடிப்படையாக தமிழர்கள், தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும், அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம், இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும், மீட்டெடுக்கவும், இன்னும் சொல்லப்போனால், இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாரு? நம்முடைய பூர்வீகம் எது? நம்முடைய அடையாளங்கள் எது? பண்பாட்டுத்தளத்தில் எப்படி இருக்கு? வரலாற்றுத் தளத்தில் எப்படி இருக்கு? கொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாக, இன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டு, பூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகி, கடந்து சென்ற பாதையை, 7 ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள்? எந்த வழியாகச் சென்றாள்? நிஜமா, பொய்யா என்ன நடந்தது? சங்க காலத்தில் நிலங்கள், சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதா? இல்லைன்னா சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானா? ஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில், அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள், போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால், இந்தத் தூசிகளை அப்புறப்படுத்தினால், இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால், அடியில் மாறாத-_ இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்து, எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, ஆய்வாளர்களுடைய பொறுப்பல்ல, நம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமே, நம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்தது? உங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்தது? உங்களுடைய சமய, சடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியது? ஏன் இந்த சடங்குகள் _ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது, நாம் புனிதமாகக் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சடங்காகச் செய்யும்போது, பலியாக கருதுகிறோம். இதற்குப் பின்னாடி, அன்றாடத் தமிழனின் வாழ்க்கையை ஒருவன் ஆராயாமல் அவனால் தமிழ் அடையாளங்களைக் கைக்கொள்ள முடியாது. இன்றைக்கு நடந்தது. நாம் கைவிட்டோம், நம்முடைய பிள்ளைகள் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இது எல்லாமே தகவல்களாகப் போய்விடும்.
சொல்லப்போனால் நான் பார்த்த ஒடிசா ஆதிவாசிகளைப்போல, அவர்களுக்குத் தமிழ் என்பது புராதன அடையாளமாக இருக்கிறதே தவிர, இன்றைக்கு ஒன்றுமே இல்லை. கேட்டேன். அவன் விறகைச் சுமந்து கொண்டு வந்தான். தோளில் அந்த விறகைச் சுமந்து கொண்டு வரக்கூடிய முறையினுடைய பெயர் என்ன என்று? அவன் சொல்கிறான். காவடி என்று, காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம்! இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என்னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவது, சமூகக் காரணிகளை, பின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையை, பொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள், இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டு, தேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறது? ஒரு காரணமும் இல்லாமல் கைவிடுகிறோம், சீனர்கள் எங்கே போனாலும் சீன நகரத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சீனப் பண்பாட்டை உருவாக்கி விடுகிறார்கள்.
சீன மொழியை உருவாக்கி விடுகிறார்கள். நான் முந்தா நாள் மலேசியாவில் போய், கருத்தைச் சொல்லும்போது, ஓர் இளைஞர் ஆவேசமாக என்னிடம் சொன்னார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது. ஒருவேளை நாடு கிடைத்தால் நாம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று சொல்கிறார். என்ன சொல்கிறீர் நண்பரே விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். அப்போ அவர் சொல்கிறார், நாங்கள் இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம், எங்கள் நாட்டில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், எங்கள் நாட்டோடுதான் ஒப்பந்தம் போட வேண்டும். நாங்கள் தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டால் அரசு சொல்கிறது மாநிலத்தோடு ஏன் ஒப்பந்தம் போட வேண்டும். ஒரு நாட்டோடுதானே ஒப்பந்தம் போட வேண்டும்? என்று.
இவ்வளவு கோடி பேர் தமிழர்கள் வசிக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இந்த ஆதங்கம், நண்பர்களே, இதுவும் ஓர் அரசியல்தான். இந்த அரசியலையும் நாம் மேலோட்டமாகப் பார்த்து யாரோ ஒருவர் கூட்டத்தில் ஆதங்கப்படுறாரேன்னு போயிட முடியாது. ஆழமாக சமகால உண்மைகளை, சமகால வலியை நாம் புரிந்து கொள்ளத் தொடங்கினால், நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருவோம்.
எழுத்தாளனான என்னுடைய தேடுதல் என்பது தமிழ் வாழ்வினுடைய, தமிழின் பெருமையினுடைய இன்னும் சொல்லப்போனால் தமிழ் விட்டுப்போன விஷயங்களை மீளாய்வு செய்வதும், கண்டுபிடிப்பதும் அதைப் பகிர்ந்து கொள்வதும்தான்.
தொகுப்பு : க.செல்வக்குமார், அ.பிரபாகரன்
Courtesy :-unmaionline.com
0 comments:
Post a Comment